ராமஜெயம் கொலை வழக்கு... கோவையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கோவை: ராமஜெயம் கொலை வழக்கில் கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வர்ஷா வாகன உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவலாக வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சியை சேர்ந்தவர் கே.என். ராமஜெயம். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான இவர், திருச்சி முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் காலை தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சில மர்மநபர்கள் இவரை கடத்திச்சென்று படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது திருச்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட தலைமை காவல்துறை தனது விசாரணையை தொடங்கியது.

அதன்பின்னர் வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சுவரொட்டிகள் ஒட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குழு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாருதி சுசுகி வர்ஷா கார் வாகனம் இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழக முழுவதும் 1400 மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வர்ஷா வாகன உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவலாக வெளியாகி உள்ளது. தற்போது கோவையில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.