ரேஷன் அரிசி கடத்தல்: ரேஷன் கடை விற்பனையாளர் உட்பட 4 பேர் கைது

கொரியர் வேனில் வைத்து 125 மூடை யை கடத்திய ரேஷன் கடை விற்பனையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரமக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாதன் தலைமையில் போலீசார் பார்த்திபனூர் சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த கொரியர் வேனை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 125 மூடை ரேஷன் அரிசிகளை வேனுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும், ரேஷன் அரிசி கடத்தியதாக ரேஷன் கடை ஒன்றில் பணியாற்றி வரும் விற்பனையாளர் முத்துக்குமார் (வயது 45) மற்றும் மாரியப்பன், ராமகிருஷ்ணன், முருகானந்தம் ஆகிய 4 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 125 அரிசி மூடைகள் கமுதக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.