கொரோனா பரவலால் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு... கொரோனா பரவல் காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பரவிய கொரோனா கடந்த மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் ஒற்றை எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகள் இன்றி சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர்.

ஆனால், தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 5000 ஐ தாண்டி வருகிறது. இதனால், தளர்வுகள் அற்ற ஊரடங்கினை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் யூதர்களின் வருடப்பிறப்பு உள்ளிட்ட திருவிழாக்கள் வருவதால் 3 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு 500 மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு கூறுகையில், 'மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கினை தவிர்க்கமுடியாது' என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 1,79,071 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,800 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1,196 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒரே நாளில் அங்கு 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.