துருக்கி மற்றும் சிரியாவில் தோண்ட, தோண்ட உடல்கள் மீட்பு

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலை போல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது. துருக்கியில் 30 ஆயிரம் பேரும் சிரியாவில் 4 ஆயிரம் பேரையும் நிலநடுக்கம் காவு வாங்கி உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அவ்வப் போது குழந்தைகள் உள்பட சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

துருக்கியில் 147 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி மீட்கப்பட்டு உள்ளார். இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாலும் அங்கு கடுமையான குளிர் நிலவி வருவதாலும் கட்டிட இடி பாடுகளில் உள்ளவர்கள் உயிர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்றும் பலரது உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.