சென்னை மாநகராட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 28 ஆக குறைந்தது

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 28 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. பொது மக்களும் தங்களது அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 70 தெருக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 28 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் திருவொற்றியூர் மண்டலத்தில் 3 தெருக்களும், மணலி மண்டலத்தில் 4 தெருக்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 8 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 7 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்களும், கோடம்பாக்கத்தில் ஒரு தெருவுக்கும், அடையாறில் 2 தெருக்கள் என மொத்தம் 28 தெருக்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.