வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

மதுரை மல்லிகை பூவுக்கு எப்போதும் தனி பெயர் உண்டு. தற்போது பனி காலமாக இருப்பதால், பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மல்லிகைப்பூவின் விலை தொடர்ந்து குறைவாகவே இருந்தது. ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தற்போது அதனுடைய விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.1,800 முதல் ரூ.2 ஆயிரம் வரை இருந்தது. இதுபோல் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை ரூ.600 முதல் ரூ. 700 வரை விற்பனை செய்யப்பட்டது.

முல்லை ரூ.700, சம்பங்கி ரூ.120, அரளி ரூ.300 என விற்பனையானது. கனகாம்பரம், மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை, பட்டன்ரோஸ், ரோஜாப்பூவின் விலையும் அதிகமாகவே காணப்பட்டது. இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வர இருப்பதால் பூக்களின் விலை அதிகமாக உள்ளது.

அதுமட்டுமின்றி நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வரும் காலங்களிலும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. புத்தாண்டு முடிந்த பின்னர் தை பொங்கல் வரும் என்பதால் அந்த நாட்களிலும் பூக்களின் விலை அதிகமாகவே இருக்கும் என்று தெரிவித்தனர்.