சிக்னல்களில் இன்னிசையுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை: நில்லுங்க... இசை கேளுங்க... புறப்படலாம்... போக்குவரத்து சிக்னல்களில், இன்னிசையுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை வழங்கும் பணியை, மாநகர போலீசார் நேற்று தொடங்கினர்.

கோவை மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் செயல்படும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களில், பாதசாரிகள் கடந்து செல்வதற்கு ஏற்ற, பிரத்யேக சிக்னல் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.வாகனங்களுக்கு மத்தியில் பாதசாரிகளும், சாலையை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், சிக்னல்களில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதன்படி, சிக்னல்களில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கு வசதியாக, 'கவுன்ட் டவுன்' சிக்னல் வசதி, பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட 'மார்க்கிங்' வசதி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகளை ஒலிபரப்பும் வசதி, பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம், அறிவுரை வழங்கும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த நவீன வசதிகளுடன் கூடிய, புதிய சிக்னல் திறப்பு விழா, லஷ்மி மில்ஸ் சந்திப்பில் நேற்று மாலை நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிக்னலை திறந்து வைத்தார். போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

'சிட்ரா' மற்றும் ஹோப் காலேஜ் சிக்னல்களிலும், இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகளுக்கு மத்தியில், பிரபல இசையமைப்பாளர்களின் இன்னிசை கோர்வைகளும் ஒலிபரப்பாகும் என்று, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.