கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை.. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

சென்னை: அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கின. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்தது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 3.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 10ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும்.இந்த கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பான தகவல்களைக் கட்டணமில்லா 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.