இருளில் மூழ்கி கிடந்த ஓடுபாதை... விமானத்தை தரையிறக்கி இந்தியர்களை மீட்டு சாதனை

சூடான்: சினிமா பாணியில் மீட்பு... உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருளில் மூழ்கிக் கிடந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை வீரர்கள், சினிமா பாணியில் 121 இந்தியர்களை மீட்டுள்ளனர்.

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 13 தவணைகளாக இதுவரை 2 ஆயிரத்து 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஜெட்டாவில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

இதனிடையே, சூடானில் இருந்து வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என 121 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பவோ, தரையிறங்கவோ வசதி இல்லாத விமான நிலையத்தின் ஓடுதளத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட விமானப்படை விமானத்தை இறக்கினர்.

விமானத்தை கிளம்பத் தயார்நிலையில் வைத்துக் கொண்டு, நைட்விஷன் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கமாண்டோக்களைப் போன்று செயல்பட்ட விமானப்படை வீரர்கள் 121 பேரையும் விமானத்தில் ஏற்றினர். தாக்குதல் சம்பவங்களுக்கு நடுவே, சினிமா பாணியில் விமானப்படை வீரர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

அதே நேரத்தில், தனது நாட்டு மக்களை மீட்பதற்கு தரையிறங்க முயன்ற துருக்கி விமானம் சூடான் ராணுவத்தின் தாக்குதலில் லேசான சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.