எஸ்.பி.பி., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; முதல்வர் அறிவிப்பு

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி உடல்நிலை முதலில் சீராக இருந்தது.

பின்னாளில் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எஸ்.பி.பி உடல்நலம் தேறி வர வேண்டும் என்று திரையுலகினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று மதியம் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் போன்ற பல விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், தமிழக மக்களின் மனதில் மட்டுமல்லாது இந்திய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றும், காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை மற்றும் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.