கொரோனா வைரஸ் தொற்று யாருக்கு எளிதாக பரவும் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

கொரோனா வைரஸ் தொற்று பரவியது முதல் உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. கொரோனா பரவியது முதல் விஞ்ஞானிகள் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி கண்டறிய ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள், சீனாவின் குவாங்சோவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான 349 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 1964 பேர் பற்றிய தரவுகளை பயன்படுத்தியுள்ளனர்.

‘தி லேன்செட் தொற்று நோய்கள்’ என்ற பத்திரிகையில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கு எளிதாக பரவும் என்பது பற்றி விஞ்ஞானிகள் முதன்முதலாக ஆராய்ச்சி செய்து அதுபற்றிய தங்கள் முடிவை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் உணர்வதற்கு முன்பாகவே, அவர் குடும்பத்திற்கு கொரோனா பரவி விடும்.

சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தொற்றுகளைப்போல அல்லாமல், இந்த கொரோனாவை பரப்புகிற சார்ஸ் கோவ்-2 வைரஸ், வீடுகளில் எளிதாக பரவிவிடும். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ்-2 வைரஸ், குடும்பங்களில் உள்ள 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய நேரத்தில் தடம் அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை சரியான நேரத்தில் தனிமைப்படுத்தி விட்டாலே கொரோனா பரவலை குறைப்பதில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று உள்ள நபர்கள், அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னர் தொற்றுநோயை மற்றவர்களுக்கு பரப்பும் தன்மை அதிகமாக உள்ளது எனவும், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடையே வீட்டு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. 20 வயது அல்லது அதற்கு குறைவான வயதினருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாகவுள்ளது. இதனால் இந்த வயது பிரிவினர் கொரோனாவிலிருந்து தப்பலாம் என்று தெரியவந்துள்ளது.