விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? - சீமான்

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் எழுத்தாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது?. அவர்களும் எனது தம்பிகள்தான். அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஒரு நடிகர் நடிப்பதால் மட்டுமே அரசியலுக்கு வந்துவிடலாம் என்ற தகுதி இருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.

தொடக்க காலத்தில் இருந்தே தம்பி விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. நடிகர் சூர்யா பொது பிரச்சினைகளைதுணிந்து பேசுகிறார். குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவாவது குரல் கொடுத்திருக்க வேண்டும். பொது மக்களுக்காக போராடி விட்டு, அவர்களின் நன்மதிப்பை பெற்று அரசியலுக்கு வாருங்கள்.

வைகோவுக்கு என்னை திட்ட வேண்டும். அவர் பெரியவர் திட்டுகிறார். நான் சிறியவன், கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். நல்லவர் என்றால் ஏன் வைகோ தி.மு.க.வில் இருந்தார். அ.தி.மு.க.வுக்கு சென்று இருக்கலாமே?. இலவசம் என்ற வார்த்தையை கூறி தமிழகத்தில் ஏழ்மையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. கல்வி, மருத்துவம், தரமான குடிநீர் இலவசமாக தரப்படும் என்று கூறினார்.