கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல்நீர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்து செல்லனம், வைப்பின், நாயாரம்பலம், எடவனக்காடு போன்ற கடற்பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றமாக இருந்தது. இந்நிலையில் திடீரென கடல்நீர் கொந்தளித்து அங்கிருந்த கிராமங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு கடல்நீர் புகுந்ததால், அங்கிருந்த கிராம மக்கள் பதறினர். பின்னர் இரவு நேரம் வந்துவிட்டதால், தூங்க சென்று விட்டனர். தற்போது, அந்த பகுதியில் நேற்றும் ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுனாமி வந்துவிட்டதாக நினைத்த பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்த உயரமான இடங்கள் மற்றும் மாடிகளுக்கு ஓடினர். ரூ.20 லட்சம் செலவில் கடல் கொந்தளிக்கும் சமயங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க கட்டப்பட்டிருந்த ஜியோபாக் என்ற தடுப்புச்சுவர் நேற்று வீசிய அலையில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் கடல்அலையும் கொரோனாவுடன் கை கோர்த்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.