ஆப்கானிஸ்தானில் ஓராண்டாக செயல்பட்டு வரும் ரகசிய பள்ளிகள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கடந்த ஓராண்டாக ரகசிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக சிறுமியர் பாடங்களை கற்றாலும் அதற்கான அரசு சான்றிதழ் பெற முடியாது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உத்தரவால் பெண்கள் பள்ளிக் கல்வியை இழந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களை செய்தனர்.

குறிப்பாக, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். சிறுமியர் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். ஆனால், கல்லூரிக்கு செல்வதை தடுக்கவில்லை. இதனால், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவியர் ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் காபூலில் வசிக்கும் சோடாபா நஜந்த் என்ற இளம்பெண் தன் சகோதரியுடன் சேர்ந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி நடத்துகிறார். தலிபான்களின் அட்டூழியத்தால் பள்ளிக் கல்வியை இழந்து தவிக்கும் சிறுமியருக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பித்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய சோடாபா நஜந்த், “இந்தச் சிறுமியருக்கு கல்வி கற்பிப்பதன் வாயிலாக தலிபான்களின் முடிவை எதிர்க்கிறேன். ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் கடந்த ஓராண்டாக இதுபோன்ற ரகசிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக சிறுமியர் பாடங்களை கற்றாலும் அதற்கான அரசு சான்றிதழ் பெற முடியாது. இந்த நிலை மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது,'' என்றார்.