சார்ஜாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1½ கோடி திர்ஹாம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

சார்ஜா பகுதியில் சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்யாத ஆன்டி ஆன்ஸைட்டி பில்ஸ் எனப்படும் மன உளைச்சலை போக்கும் மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த மாத்திரையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் போதை மற்றும் நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்தும். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சந்தேகப்படும்படியான மாத்திரைகளை அமீரகத்தில் உள்ள சில ஏஜென்டுகளுக்கு விற்பனை செய்வதை போலீசார் கண்டறிந்தனர். எனவே இந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.அதன்பின், சார்ஜா போலீஸ் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் மஜித் அல் அசெம் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை செய்பவர்களை பிடிக்க வலைவிரிக்கப்பட்டது.

இதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மாத்திரைகளை சார்ஜா பகுதியில் உள்ள மருந்தகங்களில் பிரித்து விற்பனை செய்ய முயற்சி செய்த 9 பேரை சார்ஜா போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 1½ கோடி திர்ஹாமாகும்.

பொதுமக்கள் இதுபோன்று சட்டவிரோதமாக மருந்துகளை அல்லது போதைப்பொருளை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக 8004654 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது dea@shjpolice.gov.ae என்ற இ-மெயில் மூலம் தகவல் அளிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் மஜித் அல் அசெம் கூறினார்.