சுற்றுச்சூழல்துறை சூப்பிரண்டு வங்கி லாக்கரிலிருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் கடந்த 2½ மாதங்களில் மட்டும் லஞ்சம் வாங்கும்போது கையும்களவுமாக பிடிபட்ட 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ரூ.7 கோடி அளவுக்கு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள சுற்றுச்சூழல்துறை சூப்பிரண்டு பாண்டியன் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க, வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து பாண்டியன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது பெயரிலும், மனைவி, மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ள சொத்து விவரங்களை கேட்டு பத்திரப்பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக கண்டறியப்பட்டவுடன் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே பாண்டியனின் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திறந்து பார்த்தனர். அதில் கணக்கில் வராத ரூ.50 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததாகவும் அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.