சுயநல அரசியலால் ஏழை மாணவர்களில் மருத்துவ கனவு சிதைந்துவிட்டது- அன்பழகன் எம்.எல்.ஏ.

மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தர அ.தி.மு.க. வலியுறுத்தியும் காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு இருந்தபோது நான்கு மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றம் செய்ய புதுவை அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. மீதமுள்ள கல்லூரிகளையும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முன்வராத கவர்னர் எதையோ மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு அந்த பிரச்சினையை அனுப்பியுள்ளார். இதிலும் ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் ஒரு இடம்கூட அரசுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். தேசிய மருத்துவ ஆணையத்தினுடைய உத்தரவின்படி 50 சதவீத இடங்களை சட்ட ரீதியில் பெறவேண்டிய புதுவை அரசு அதற்கான எந்த முயற்சியையும் சட்டமன்றத்தின் மூலம் எடுக்காமல் தனியார் கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டு வருகிறது.

50 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு சம்பந்தமாக கவர்னரே அனுமதி வழங்கவேண்டிய அதிகாரம் உள்ள நிலையில் அவர் தேவையற்ற முறையில் மத்திய அரசுக்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றுவிட்டார். இதில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு விரித்த மாணவர்களுக்கு எதிரான வலையில் கவர்னர் எதையோ நினைத்துக்கொண்டு விழுந்துள்ளார். இதனால் 50 சதவீத இடஒதுக்கீடு பெற முடியாத சூழல் உருவாக்கப்பட்டு விட்டது.

தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு இல்லாமலும், 50 சதவீத இடஒதுக்கீடு பெறாமலும் சென்டாக் கலந்தாய்வு நடத்த கவர்னர் அறிவித்திருப்பது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசின் எண்ணத்தை ஈடேற்றுவதாக உள்ளது. கவர்னரும், ஆட்சியாளர்களும் அவரவர் விருப்பு, வெறுப்பு அரசியலால் இவ்வாண்டு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வியின் கனவை சிதைத்துவிட்டார்கள் என அதில் அவர் கூறியுள்ளார்.