செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் வரும் 15ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டம் தொடர்பான வழக்கில் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக 150 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்க ஆவணங்களை டிரங்குப் பெட்டியில் அமலாக்கத் துறை ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்தது.

புழல் சிறையில் இருந்து நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி ரவி, அமலாக்க இயக்குநரகம் தொடர்பான வழக்கில் இந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது என்பதால், அதற்காக சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.

அடுத்த காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராகினால் போதும் என்றும் சிறைத்துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.