தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய-மாநில அரசுகளின் தொடர் தோல்விகளால் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24-ந் தேதி நாட்டு மக்களிடம் பேசி, நள்ளிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்திய பின் நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், கொரோனா ஊரடங்கால் நாட்டின் உற்பத்தி துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமுதாய பரவலாக மாறிவிட்டது. சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண நிர்ணயம், உயர் நடுத்தர மக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசுக்கு கண், காது, இதயம் உள்ளதா? மக்களுக்கு ஆதரவாக உள்ள அரசு இத்தகைய வேலையை செய்யாது. ஒரு குடும்பத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்ந்தால் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும். இந்த செலவை மக்களால் தாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று சித்தராமையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.