கடந்தாண்டில் ஆறு மில்லியன் பேருக்கு உணவு பாதுகாப்பின்மை: ஆய்வில் தகவல்

கனடா: உணவு பாதுகாப்பு இல்லை... கனடாவில் கடந்த ஆண்டில் சுமார் ஆறு மில்லியன் பேர் ஏதோ ஓர் வகையிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளனர்.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. கனடாவில் கடந்த 2021ம் ஆண்டில் 5.8 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதில் 1.4 மில்லியன் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரையிலான காலத்தில் உணவு பாதுகாப்பின்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டு காலமாகவே இவ்வாறு மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை வெகுவாக எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தும் சாதகமான திட்டங்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் போஷாக்கு விஞ்ஞானத்துறை பேராசிரியர் வெலாரி டாராசுக் தெரிவித்துள்ளார்.

அல்பர்ட்டாவில் 20 வீதமான வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை காணப்படுவதாகவும், கியூபெக்கில் இது 13 வீதமாக காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்டுகின்றது.