துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 3-ல் ‘ஸ்மார்ட் கேட்’ திறப்பு

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 7-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் முத்திரை பெற்று செல்லும் முறை இருந்து வந்தது. தற்போது பயணிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு ‘ஸ்மார்ட் கேட்’கள் விமான பயணிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வருகிறது. தற்போது முனையம் 3-ல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விமானத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் முகப்பு பகுதியை ‘ஸ்மார்ட் கேட்’ நுழைவு பகுதியில் உள்ள உணரும் கருவியில் வைத்தால் போதும். தானியங்கி முறையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு குடியேற்ற பிரிவை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது கண்ணாடி கதவு தானாக திறந்து வழிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இதன் காரணமாக வரிசையில் நின்று காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. பயணிகளின் வசதியை மேம்படுத்தி அவர்கள் எளிமையான முறையில் பயணம் செய்ய இந்த ‘ஸ்மார்ட்’ முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.