கிணற்றில் தவறி விழுந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 34). இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் குடும்பத்தினர் சாமி கும்பிட முடிவு செய்தனர்.

இந்த நிலையில் குளித்துவிட்டு வருவதாக மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வினோத், அங்குள்ள ஒரு கிணற்றிற்கு சென்றார். நீச்சல் தெரியாததால், படிக்கட்டில் நின்று குளித்தார். அப்போது தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். குளிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோத் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் வினோத்தின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீரில் மூழ்கி இறந்த வினோத்திற்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அவருடைய உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.