சில அரசியல்வாதிகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்கின்றனர் - மந்திரி கைலாஷ் சவுத்ரி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண்துறை இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடரும் என்று அரசு கூறியுள்ளது. அதை எழுத்துப்பூர்வமாக வேண்டுமானாலும் கொடுக்கலாம். மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நாட்டில் உள்ள விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் சில அரசியல்வாதிகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விவசாயிகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டில் எங்கும் அமைதியின்மையை ஏற்படுத்தும் ஒரு முடிவை விவசாயிகள் ஒருபோதும் எடுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த சட்டங்கள் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளன. உண்மையான விவசாயிகள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதாக நான் நினைக்கவில்லை. இது எவ்வாறு அரசியல் மயமாக்கப்படுகிறது என்பதை விவசாயிகள் சிந்திக்க வேண்டும். அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பவர்களின் வலையில் விவசாயிகள் விழுந்துவிடக்கூடாது என கைலாஷ் சவுத்ரி கூறினார்.