எண்ணெய் கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் வந்து விட்டதாக இலங்கை கடற்படை தகவல்

‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு இந்தியாவுக்கு வந்தபோது, இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் கடந்த 3-ந்தேதி தீ விபத்திற்கு உள்ளானது. இந்த தீ விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின், இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கப்பலில் மீண்டும் தீப்பிடித்தது. உ‌‌ஷ்ணம் மற்றும் தீப்பிழம்புகள் காரணமாக மீண்டும் தீ பிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்தது. அதன்பின் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை உதவியுடன் கப்பலில் மீண்டும் பற்றிய தீயை அணைக்கும் மீண்டும் நடைபெற்றது.

தற்போது கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எண்ணெய் கப்பலில் 2-வது முறையாக பற்றிய தீயை பேரிடர் மேலாண்மை குழுக்கள் இன்று காலையில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இப்போதுவரை கப்பலில் தீப்பிழம்புகள் அல்லது புகை எதுவும் இல்லை. பேரழிவுக்கு உள்ளான இந்த கப்பல் பாதுகாப்பான நீர் பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் தீ விபத்தில் கச்சா எண்ணெய் கசிவு ஏதும் ஏற்படவில்லை.