பஸ் போக்குவரத்தை துவங்க ஒடிசா, கர்நாடகா முடிவு

பஸ் போக்குவரத்தை துவங்க முடிவு... ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவங்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதற்குமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 50 நாட்களுக்கு பின்னர் கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்தை துவங்குவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாப்பெஹ்ரா கூறியதாவது:

மாநில முதல்வர் பட்நாயக் பஸ் போக்குவரத்து துவங்க அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து பச்சை மண்டலங்களில் பஸ் போக்குவரத்து துவங்கப்படும். அதே நேரத்தில் பயணிகளின் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்படும். சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். முதற்கட்டமாக புவனேஸ்வரில் இருந்து கட்டாக்கிற்கு பஸ் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார். கர்நாடகாவிலும் பஸ் போக்குவரத்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் பஸ் போக்குவத்து முடங்கியது. இந்நிலையில் மாநிலத்தின் உடுப்பி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளது.

இதனையடுத்து மாநிலத்தின் குண்டாபூர்,ஹெப்ரி மற்றும் கார்கலா, ஹெஜாமடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்தை துவங்க முடிவு செய்துள்ளது இதனையடுத்து சுகாதார நெறிமுறை படி அரசு பஸ்கள் மற்றம் தனியார் பேரூந்துகளை இயக்க மாவட்ட துணை ஆணையர் ஜெகதீசா அனுமதி அளித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி விட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.