ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக, சூறாவளி காற்று நீடித்தது. கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதால் பாம்பன் கடல் மிகவும் ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டது. தனுஷ்கோடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அலைகள் சீற்றமாக இருந்ததால் கடற்கரையோரம் வசித்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முழுவதும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இன்று 3-வது நாளாக மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் இன்றும் காற்று, மழை நீடித்து வருகிறது.

இதற்கிடையில் புரெவி புயல் வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வலுவிழந்த புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. பாம்பனுக்கு தென்மேற்கே சுமார் 20கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வுநிலை தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே இன்று இரவு அல்லது நாளை காலை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணிக்கு ராமநாதபுரம் வந்த அந்த ரயிலில் இருந்த பயணிகள் அங்கிருந்து ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். புயல் எச்சரிக்கை காரணமாக மதுரை விமான நிலையமும் பகல் 12.00 மணி வரை மூடப்பட்டிருந்தது.