அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வழிமுறைகள் இன்று வெளியிடப்படும்!

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி தொடங்கி, 31-ந்தேதி வரை விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் நடைபெற்றது.

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டத்தட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று (புதன்கிழமை) அந்தந்த கல்லூரிகள் வாயிலாக மின்னஞ்சல் மற்றும் செல்போனில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை 28-ந்தேதியும் (நாளை மறுநாள்), பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை 29-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்தமாதம் செப்டம்பர் 4-ந்தேதி வரையும் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.