இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்?

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம்தான் காரணம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருளாதார திட்டங்களால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல், பொதுமக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக எரிவாயு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி வெடித்து, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டத்தில் ஏராளமான பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அதிபர் உள்ளிட்ட பதவிகளில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் விலகி, ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து அதிபர் கோத்தப்பய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்மாநில உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரே பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முன்னாள் நிதி அமைச்சக செயலாளர் உள்ளிட்ட 13 பேரும் இதற்கு பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இவர்களின் தவறான கொள்கைகள் காரணமாக நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதோடு, நாட்டின் பொருளாதாரத் ஸ்திரத்தன்மையும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜபக்ச குடும்பத்தினர் மீது தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.