கொரோனா காலத்தில் முதியோரை பாதுகாக்கும் உதவிகள் குறித்து மாநில அரசுகள் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வழக்கறிஞருமான அஷ்வனி குமார் மனு தாக்கல் செய்தார். அதில், முதியோருக்கு தேவையான மாஸ்க்குகள், சானிடைசர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிடும்படி கூறியிருந்தார்.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றது. ஆகஸ்ட் 4ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, அனைத்து தகுதியுள்ள முதியவர்களுக்கும் தவறாமல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான மருந்துகள், மாஸ்க்குகள், சானிடைசர்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

முதியோரை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக மாநில அரசுகள் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன. மற்ற மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த[போது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டு, 4 வாரங்களுக்குள் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.