ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம்... அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார்.

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, கட்சிப்பணி மற்றும் திரைத்துறையில் ஒரே நேரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என கருதப்பட்டது. இந்நிலையில் தான் உதயநிதியை அமைச்சராக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அதையேற்று, இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, உதயநிதிக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா அப்பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, உதயநிதி தன்னுடைய தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.