தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி அருகே செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்லைக்கழகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுமென பல்கலைக்கழகப் பதிவாளர் புவனேஸ்வரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.