இந்தியா அளவில் தற்கொலையில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகள், அதனால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் தற்கொலைகள் குறித்து அந்த அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும், மேற்கு வங்காளம் 3-வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4-வது இடத்திலும், கர்நாடகம் 5-வது இடத்திலும் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்து இருந்தனர். கடந்த ஆண்டு(2019) 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதன்மூலம் தற்கொலையில் 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டு 3.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டில் மராட்டியத்தில் 18,916 பேரும், தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 493 பேரும், மேற்கு வங்காளத்தில் 12 ஆயிரத்து 665 பேரும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்து 457 பேரும், கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 288 பேரும் என ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் 41 ஆயிரத்து 493 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவார்கள்.

இந்தியாவில் உள்ள நகரங்களின் அடிப்படையில் பார்த்தால் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னையில் 2 ஆயிரத்து 461 பேரும், டெல்லியில் 2,423 பேரும், பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டில் பெங்களூருவில் 2,082 பேர் தற்கொலை செய்து இருந்தனர்.

இவர்கள் அனைவரும் குடும்ப பிரச்சினை, உடல்நலக்குறைவு, தொழில் பிரச்சினை, தனிமை உணர்வு, வன்கொடுமை, மனநலம் பாதிப்பு, குடிப்பழக்கத்தை கைவிட முடியாமை, நிதி நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் தங்களது உயிரை மாய்த்து உள்ளனர். மேலும் கடன் தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் தற்கொலை செய்து கொள்வதிலும் கர்நாடகம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இதுபோல கடந்த ஆண்டு(2019) கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 9,314 பேர் இறந்து உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.