தமிழகம் முழுவதும் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு...பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளும் இந்த மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏற்கனவே முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தது.

நாளை 9-வது முறையாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கின்போது அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பால் வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே நாளை அனுமதிக்கப்படும். வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. இதனை மீறி வெளியில் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட சிக்னல்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட மேம்பாலங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் மாதம் கடைசி 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு முடக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மட்டும் 11-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இப்படி நாளை நடைபெற உள்ள முழு முடக்கத்தை கடுமையாக கடைபிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று முதல்-அமைச்சர் பழனிசாமி ஊரடங்கை நிட்டிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை நீட்டிப்பதா இல்லை முடிவுக்கு கொண்டுவருவதா என்பது பற்றியும் ஆலோசித்து அறிக்கவிப்படுகிறது.