விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா அரசு ஆதரவு அளிக்கும் - சந்திரசேகரராவ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் நாளை நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் செய்வது நியாயமான போராட்டம். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். விவசாயிகளின் நலனை பழிவாங்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள் இருப்பதாலேயே பாராளுமன்றத்தில் விவசாய மசோதாவை எங்கள்கட்சி எதிர்த்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே விவசாயிகளின் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதோடு முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்வோம். எங்கள் கட்சி தொண்டர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நானும் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அம்மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரியுமான தாரக ராமாராவ் தெரிவித்தார். மேலும் அவர், வியாபாரிகள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களை ஒரு விவசாயியாக சந்திர சேகரராவ் எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறார். நாளை மதியம் 12 மணி வரை முழுமையான கடை அடைப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.