13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில்

சென்னை: 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டாத நிலையில், நேற்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. அதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டாத நிலையில், நேற்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.

இந்த ஆண்டில் முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.26 ஃபாரன்ஹீட்டும், மீனம்பாக்கத்தில் 105.08 ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மற்றும் நாகையிலும் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களிலும் வெப்பம் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 18 ஆம் தேதி வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு 104 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.