மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ.

நீலகிரி ; மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ... முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு நீடிக்கும். அதிலும், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் பசுமையை இழந்துவிடும்.

மேலும் ஆங்காங்கே காட்டு தீ ஏற்படும். அதன்படி கடந்த 3 மாதங்களாக ஊட்டியில் பெய்த உறைபனியால் வனப்பகுதி வறட்சியை சந்தித்து வருகிறது. அங்கு காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்தது.

ஆனாலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து எரிந்து வந்த தீயை நேற்று மாலை வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று முதுமலை காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. மரவகண்டி அணை பகுதியில் கரை ஓரத்தில் இருந்த காய்ந்த மூங்கில்களில் இந்த தீயில் மனமளவென எரிந்தது. சுமார் 50 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.