சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைந்ததால் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ள தாய்லாந்து

கடுமையான பொருளாதார சரிவு... உலக நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக தாய்லாந்து நாட்டில் பொருளாதாரம் கடும் வருடாந்திர சரிவை சந்தித்துள்ளது.

சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்தில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருகை மிகவும் குறைந்தது. கடந்த ஆண்டு சுமார் 4 கோடி பேர் வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து வந்த நிலையில் இந்த ஆண்டு 67 லட்சம் பேர் மட்டும் வந்துள்ளனர்.

நாட்டின் ஏற்றுமதி, தனியார் முதலீடு, நுகர்வுத் திறன் ஆகியவையும் கணிசமான அளவு குறைந்துள்ளன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், பாதிப்பு அடைந்த அனைவருக்கும் உதவவும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது காலாண்டில் 12.2 சதவீதம் அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள சூழலில் பல்வேறு தரப்பினர் மாணவர்கள் உதவியுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்தவரை தாய்லாந்தில் மற்ற நாடுகளை விட மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

அங்கு இதுவரை மொத்தம் 3,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 58 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 3,194 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் கொரோனா மீட்பு விகிதம் 94.55 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார்.