முகக்கவசம் அணிந்ததற்கு நன்றி; வரவேற்பு கொடுக்கும் ரோபோ

உலக நாடுகளை வெகுவாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிய அனைத்து நாடுகளும் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் பொதுவெளிக்கு வருவோரை முகக் கவசம் அணியுமாறும், அணிந்திருந்தோருக்கு நன்றி கூறும் இயந்திர மனிதன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் என்ற நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோவைத் தயாரித்துள்ளது. இந்த ரோபோ, 47 இன்ச் உயரத்துடன் நெஞ்சினில் சிறிய அளவு கம்ப்யூட்டரைச் சுமந்தபடி நிற்கிறது.

வணிக வளாகம் அல்லது திரையரங்கு வாசலில் நிற்கும் பெப்பர் வரும் வாடிக்கையாளர்களின் முகத்தை படம் பிடித்துக் கொள்கிறது. அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் நன்றி கூறி உள்ளே அனுப்பியும், அணியாமலிருந்தால் அணியுமாறும் வலியுறுத்தி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.