பட்டாசுகள் வெடிப்பதற்கு கூறப்படும் உளவியல் ரீதியான காரணம்

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு உளவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோம.

பிரகாசமான திருநாள் தீபாவளி. தீப ஒளியில் நம் உள்ளமும் இந்த உலகமும் திளைக்கும் ஒரு நாள். இந்த நாளில் எப்படி கொண்டாடுவது தீபாவளியை? என்கிற கேள்வி எழும். தீபாவளி நாளில் திரி பாதி மட்டுமே எண்ணெய் தீபத்தில் மூழ்கியிருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் .

அதற்கான காரணம், திரி முழுமையாக தீபத்தில் மூழ்கியிருக்கும் எனில், மனிதர்களாகிய நாமும் பொருள் ரீதியான உலகில் முழுமையாக மூழ்கிவிடுவோம் என்பதை குறிக்கிறது. எப்படி திரியானது, பட்டும் படாமல் எண்ணையில் மிதந்து இருக்கிறதோ, அது போல பொருள் வாழ்க்கையிலான இவ்வுலகில் பட்டும் படாமல் நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

இந்த நாளில் வீட்டினை அலங்காரமாக வைத்திருப்பது வீட்டிற்கு மங்களகரமான அடையாளத்தை கொடுக்கும். அலங்காரம் என்பது பெரிய செலவிலான அலங்காரங்கள் அல்ல. வீட்டில் அல்லது வீட்டில் வாசலில் ஒரு சிறிய தீபத்தை ஏற்றுவதே வீட்டிற்கு போதுமான லக்‌ஷணத்தை வழங்கும்.

தீபாவளி என்ற வார்த்தைக்கே வரிசையான விளக்குகள் என்று அர்த்தம். வாழ்வின் ஒவ்வொரு படிநிலைக்கும் வெளிச்சம் தேவை என்கிற கருத்துருவாக்கத்தை இது உணர்த்துவதாக உள்ளது.

இந்த நாளில் பட்டாசு வெடிப்பது ஏன்? என்கிற கேள்வி எழும். பட்டாசு என்பது வெடித்து சிதறும் தன்மை உடையது. ஒரு மனிதன், கோபம், ஆக்ரோஷம் போன்ற விஷயங்களில் இருந்து வெடித்து வெளியேற வேண்டும். நாம் நம்முடைய உணர்வுகளை, ஆசைகளை அடக்கி வைத்தால் அது ஒரு நாள் அதற்குரிய எல்லையை அடையும்.

எனவே அவ்வப்போது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். எனவே பண்டைய காலத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உளவியல் பயிற்சியாகவே இந்த பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

மேலும் உறவுகளை பலப்படுத்த இனிப்புகள், வாழ்த்துகளை பரிமாறி கொள்வது இந்த பண்டிகையின் முக்கிய அம்சமாக உள்ளது. வியாபார தொடர்புகள், நீண்ட காலம் தொடர்பில் இல்லாத உறவுகள் போன்றவர்களை மீட்டெடுக்க இந்த பண்டிகை இணைப்பு பாலமாக இருக்கிறது.

இறுதியாக, தீபாவளி எனபது நிகழ்காலத்தின் அடையாளம். எனவே இந்த பண்டிகையின் போது கடந்த காலத்தின் சோகத்தை விடுத்து, வருங்காலம் குறித்த பதட்டத்தை தவிர்த்து நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதே தீபாவளி பண்டிகை.