அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனு இன்று விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு , அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவர் வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏதுவாக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனவே இதன் காரணமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு உள்ளார். இதையடுத்து இன்று அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.