16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சபீன் (வயது 21), பழ வியாபாரி. இவருக்கு முகநூல் மூலம் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முகமதுசபீன் மோட்டார் சைக்கிளில் மதுரை வந்தார். அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார். இரவு நேரத்தில் வீட்டை விட்டு சென்ற சிறுமியை காணாமல் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்த போது அது திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி என பல இடங்களில் இருப்பது போல் காண்பித்தது.

முடிவில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் சிறுமியுடன் வாலிபர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் மதுரை போலீசார் திண்டுக்கல் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.

மேலும் வாலிபரை மதுரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமதுசபீனை கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள்.