பாதுகாவலர் நடத்திய கொடூரம்... சீனாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கத்திக்குத்து

சீனாவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவிலுள்ள ஆரம்பநிலைப் பள்ளியில், 37 மாணவா்கள் 3 ஆசிரியா்கள் மீது பள்ளி பாதுகாவலா் கத்திக் குத்து தாக்குதல் நடத்தினாா். இச்சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

குவாங்ஸி ஷுவாங் மாகாணம், வூஷூ நகரிலுள்ள பள்ளியொன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த 50 வயது லீ ஷியோமின், அங்கிருந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது சரமாரியாக கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தினாா். இதில் 37 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவில் மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, பள்ளி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.