சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு தகவல்

பரிசீலனை நடக்கிறது... கடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க தவறியோருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா பிரச்னை பல இடங்களில் மழை வெள்ள பாதிப்பு போன்றவை காரணமாக சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை தள்ளி வைக்கக் கோரி செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்தபோதிலும் 'தேர்வில் பங்கேற்க தவறுவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதற்கு 'மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறைதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.தற்கிடையே அக்.4ல் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் ரச்சனா சிங் என்பவர் இத்தேர்வு குறித்து தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கொரோனா பிரச்னையால் கடந்த தேர்வை தவற விட்டவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அமர்வு விசாரணையை அடுத்த மாதம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.