பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி

புதுடில்லி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி... நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நாட்டின் பணவீக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பட்ஜெட்டில், மத்திய அரசின் பற்றாக்குறை இலக்கை பாதிக்காமல், பல்வேறு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எடுத்து, அதன்மூலம் உணவு மற்றும் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த பரிசீலனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் மீதான வரிகளை குறைப்பது, சமையல் எண்ணெய் மற்றும் கோதுமை மீதான இறக்குமதி வரியை தளர்த்துவது உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, வரும் வாரங்களில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.