மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 8-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளை (செப்.30) முடிவுக்கு வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளிலும் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அதிகரிப்பது, சிகிச்சை முறைகளின் தற்போதைய மேம்பாடு, தடுப்பு மருந்து ஆராய்ச்சி ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.