நாட்டில் எங்காவது தேர்தல் அறிவிக்கப்படுவதை கண்டாலே காங்கிரசுக்கு பயம் வந்துவிடுகிறது - மந்திரி ஈசுவரப்பா

பா.ஜனதா சார்பில் கிராம சுவராஜ்ஜிய மாநாடு திப்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் எங்காவது தேர்தல் அறிவிக்கப்படுவதை கண்டாலே காங்கிரசுக்கு பயம் வந்துவிடுகிறது. ஏனென்றால் தேர்தல் என்றாலே பா.ஜனதா வெற்றி, காங்கிரஸ் தோல்வி என்ற நிலை இருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர், கிராமப்புறங்களில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடும் தொண்டர்களுக்கு பதவி கிடைக்க கிராம பஞ்சாயத்து தேர்தல் வாய்ப்பாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு 80 சதவீத இடங்களை கைப்பற்ற வேண்டும் என ஈசுவரப்பா பேசினார்.

அதன்பின் பேசிய பிரதாப் சிம்ஹா எம்.பி., கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு வந்த பிறகு கிராமப்புறங்களில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 13-வது நிதிக்குழு மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு 14, 15-வது நிதிக்குழு, கிராமங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கி இருக்கிறது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.