கொரோனா முழுமையாக ஒழியவில்லை; கூட்டம் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தல்

கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்... 'மதுரை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக ஒழியவில்லை. எனவே மக்கள் அஜாக்கிரதையை கைவிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் அறிவுறுத்தி உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 17 ஆயிரத்தை கடந்தது. இதில் 16 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர். 395 பேர் பலியாகியுள்ளனர். 700 பேர் வரை சிகிச்சையில் உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு 400ல் இருந்து 70-80 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: ஊரடங்கில் இருந்து பெருமளவு தளர்வுகள் அறிவித்து ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த அறிவிப்புக்கு அடுத்த இருவாரங்களில் பெரிய பாதிப்பு வந்திருக்க கூடும். மாநகராட்சி, புறநகரில் நடந்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் அபாயம் நீங்கியது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரும் கூட தொற்று உயரவில்லை.

இது பாதிப்பு கட்டுக்குள் இருப்பதை காட்டுகிறது. அதே சமயம் வைரஸ் ஒழிந்துவிடவில்லை. தினமும் 80 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பலரும் பாதிப்பே இல்லாதது போன்று நடந்து கொள்வது கவலையளிக்கிறது. இது மீண்டும் ஆபத்தை உண்டாக்கும். வெளியில் செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கை கழுவுதல், சமூக இடைவெளி அவசியம். திருமணம், இறப்பு, கொண்டாட்ட நிகழ்வுகள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.