2024-ம் ஆண்டுக்குள் பொருளாதாரம் ரூ.350 லட்சம் கோடியை எட்டும் - பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில் இகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி, நீண்டகாலமாக காத்திருந்த, யாரும் செயல்படுத்த முயற்சிக்காத பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்தவகையில் நிலக்கரி, விவசாயம், தொழிலாளர், பாதுகாப்பு, சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று கூறினார்.

மேலும் அவர், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நமது தொற்றுநோய் பாதிப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. எனினும் நமது பொருளாதாரம் மீண்டும் முன்னேற்ற பாதைக்கு திரும்புவதை காட்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் நமது மக்களே காரணமாகும். கடை உரிமையாளர், வர்த்தகர், சிறு-குறு-நடுத்தர தொழில் புரிவோர், தொழிற்சாலை தளத்தில் பணியாற்றுவோர், தொழில்முனைவோர் போன்ற இந்த ஹீரோக்கள் எல்லாம் வலுவான சந்தை உணர்வுக்கும், பொருளாதார மீட்சிக்கும் காரணமானவர்கள் ஆவர் என்று கூறினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு புதிய உலகம் கட்டமைக்கப்பட்டதுபோல, கொரோனாவுக்குப்பிறகும் அதுபோன்றதொரு சூழல் ஏற்படும். இந்தமுறை உற்பத்தி பஸ்சை இந்தியாதான் ஓட்டும். இலக்குகளை நிறைவேற்றுவதில் எங்கள் அரசுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. எங்கள் வரலாறு மற்றும் தொடர் சீர்திருத்தங்கள் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.