வாயில் காயம் ஏற்பட்ட யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது

தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைக்கட்டிக்கு முன்பு உள்ள ஜம்புகண்டி அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் இருந்தது. வாயில் காயம் ஏற்பட்டதால் உணவு உண்ண முடியாமல் தவித்தது.

இதனை அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சுகுமார் பழங்களில் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். சற்று உடல்நலம் தேறிய நிலையில் நேற்று முன்தினம் மேலும் யானை சோர்வடைந்து கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டது. ஆயினும் ஊசிகள், மருந்துகள் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.

யானையும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வந்தது. இந்நிலையில் நேற்று வனத்தை ஒட்டிய அகழி அருகே யானை படுத்துவிட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானைக்கு 25 பாட்டில்கள் குளுகோஸ், இரும்பு சத்திற்கான மருந்து ஆகியவை கொடுத்தனர்.

இருப்பினும், யானை படுத்தே இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.