போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது; முன்னாள் முதல்வர் புகார்

முன்னாள் முதல்வர் புகார்... என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் பெயரில் அமைந்த ட்விட்டர் கணக்கு ஒன்றில் இருந்து சில கருத்துகள் பதியப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில் என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாநில சைபர் குற்றங்கள் பிரிவு காவல்துறைக்கு அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

'என்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றினை உருவாக்கி அதன் வழியாக சர்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்படுவது என் கவனத்திற்கு வந்தது, எனவே அச்செயலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்வதுடன், அந்தக் கணக்கையும் உடனே முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'. இவ்வவாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் @digvijaya28 என்ற பெயரில் செயல்படும் கணக்கு மட்டுமே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இவரது புகாரை ஏற்று, குறிப்பிட்ட கணக்கினை நீக்குமாறு சைபர் குற்றங்கள் பிரிவு ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.